அறிமுகம்

ட்விட்டர் 2006ல் துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இணைந்த மக்கள் தமது நண்பர்களுடன் தங்களின் குறுஞ்செய்திகளை, மன ஓட்டங்களை பகிர்ந்திடும் ஓடையாக இருந்தது, அவ்வளவு பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. செய்தி நிறுவனங்கள் உடனுக்குடன் செய்திச் சுருக்கங்களை வெளியிட ட்விட்டரை பயன்படுத்த ஆரம்பித்ததும், ட்விட்டர் தன் தளத்தின் நிரலாக்க இடைமுகத்தை (API) வெளியிட்டு அதைச் சார்ந்த சேவைகளை வழங்கிட இலவச அனுமதியளித்ததும் இதன் பயன்பாடு பன்முகமாக பெருகியது. Alexa திரட்டியின் ‘அதிகம் பேர் பயன்படுத்தும் வலைமனை’களின் பட்டியலில் முதல் 15 இடங்களுக்குள் ட்விட்டர் எப்போதும் இருக்கிறது. 2012 துவக்கத்தில் 465 மில்லியனுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் தினமும் 175 மில்லியனுக்கு மேற்பட்ட செய்திகள் பகிரப்படும் அளவில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. நொடிக்கு 11 புதிய ட்விட்டர் கணக்குகள் துவங்கப்படுகின்றன. Top 100 Learning Tools பட்டியலில் ட்விட்டரும் ஒன்று. நிறுவனங்கள் மக்களின் மனநிலையை அறிந்திட ட்விட்டர் பகிர்வுகளை ஆராய்கின்றன. உலகத்தலைவர்கள் ட்விட்டர் வழியே வெளிப்படையாக உரையாற்றிக் கொள்கிறார்கள்.

பின்லேடன் கொல்லப்பட்டச் செய்தி ஊடகங்களில் வரும் முன், அமெரிக்க அரசு அறிவிக்கும் முன்பே தற்செயலாக அந்தத் தாக்குதல் பற்றி ட்விட்டரில் பகிரப்பட்டது போல பல வியப்புச் செய்திகளும் உண்டு. எகிப்து புரட்சிக்கு துணை நின்றதும் ட்விட்டர். 2009 ஈரான் தேர்தலின் போது அரசு சமூக ஊடகங்களை மூடிவிட்டது, செய்தியாளர்களையும் வெளியேற்றிவிட்டது. அரசின் இணைய தடுப்புகளை ByePass செய்து எழுதிய கீச்சர்களின் மூலம் தான் அங்கே என்ன நடக்கிறது என்று CNN BBC போன்ற செய்தி ஊடகங்கள் கூட தெரிந்து கொள்ள முடிந்தது. “Whats Happening Right Now” இப்போது என்ன நடக்கிறது என்பது தான் ட்விட்டரின் தாரக மந்திரம். இப்போதும் நாம் கிரிக்கெட், கால்பந்து போட்டிகள், ஆஸ்கர் விருது நிகழ்வுகளை உடனுக்குடன் ட்விட்டர் வழி பகிர்ந்திட காண்கிறோம். ட்விட்டர் ஒரு ‘கட்டற்ற ஊடகம்’. தனி மனிதர்களுக்கான சமூக ஊடகம். முழு கருத்துச் சுதந்திரம் இங்குண்டு. ஒரு அறிவுசார் தகவல் பகிர்வு சமூக வலைபின்னல். உலகில் எவர் ஒருவரையும் நேரடியாக தொடர்பு கொள்ளவும், முகமறியா நண்பர்களை எளிதில் பெறவும் இயலும். வேலைவாய்ப்பு தளங்களின் தகவல்களை உடனடியாக ட்விட்டர் வழி பெற்று, அதற்கேற்ப உங்கள் வேலை தேடுதலை எளிதாக்கி கொள்ள முடியும். உங்களது விளம்பரங்களை வெளியிடும் இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கான வாடிக்கையாளர்களை பெரும் இடமாகவும் இருக்கும்.
இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். என்னவெல்லாம் செய்யலாம் என்று களமிறங்கி பார்த்து கண்டுணருங்களேன்.

உங்களுக்கான ட்விட்டர் கணக்கை துவங்கலாம்.

License

ட்விட்டர் கையேடு Copyright © 2014 by Creative commons. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *